நேரம் தவறாமல் நட...வெற்றி நிச்சயம்

நேரம் தவறாமல் நட...வெற்றி நிச்சயம்
நேரம் தவறாமை ஒரு சின்ன விஷயம் போலத் தோற்றமளித்தாலும், "பாறையைப் பிளக்கும் உளி போன்ற வலிமை அதற்குண்டு"
கடல் அலையும், நகரும் நேரமும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை என்பார்கள்.
"யாரிடமும் வாங்க முடியாத
யாருக்கும் கொடுக்க முடியாத
ஓர் உன்னத பொருள் நேரம்"
இதை, ஒவ்வொருவரும் மிக விரைவிலோ அல்லது வாழ்நாளிலோ கட்டாயமாக உணர்வோம்.
மாணவர்கள் நேரத்தை வீணாக்காது தேர்வில் வெற்றியடைய சில முக்கியமான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
நேரத்தை கடைபிடிக்கும் முறை:
பெரும்பாலான மாணவர்களின் பொதுவான குற்றச்சாட்டு , அதிகமான பாடப்பகுதிகள் மற்றும் அதை முழுமையாக படிக்க முடியவில்லை என்பதே.
இதை தவிர்க்க, முதலில் எப்பாடப்பகுதி முதன்மையானதோ,மிக அவசியமானதோ அப்பாடப்பகுதியை கவனத்துடன் படிக்க வேண்டும்.

அட்டவணை தயாரிக்க வேண்டும்:
ஓர் நாளில் எந்த பாடம், எவ்வளவு நேரம் படிக்கவேண்டும் என்பதனை அட்டவணைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அவ்அட்டவணையை ஒவ்வொரு நாளும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். எப்பொழுதும் அட்டவணையை கண்முன்னே நிறுத்தி வைத்துக் கொள்ளவேண்டும். உங்களால் முடியாது என்று தெரித்தும் அதிகமான பாடப்பகுதிகளை அட்டவணைப் படுத்தக்கூடாது. அது உங்களின் வெற்றி வாய்ப்பை இழக்கச்செய்யும்.எனவே கவனமாக அட்டவணையை தயார் செய்ய வேண்டும்.
கவனம் சிதறாமல் செயல்படு:
"தடைகள் எதுவாயினும், அதை உடைத்தெறி"
மாணவர்களின் முன்னேற்றத்திற்கு மிகப்பெரிய தடையாக இருப்பது கவனச் சிதறல்.
இது ஏற்படுவதற்கு முக்கிய காரணம் ஊடகங்கள் மற்றும் அலைபேசியே ஆகும்.
"பணத்தை இழந்தால் சொற்ப நஷ்டம்
நேரத்தை இழந்தால் எல்லாமே நஷ்டம்"
என்பதனை நினைவில் கொண்டு கவனம் சிதறாமல் உங்களது முழு முயற்சியையும் உங்களின் நல்ல எதிர்காலத்திற்கான படிப்பிற்கு பயன்படுத்துங்கள்.
நன்றே செய், அதை அன்றே செய்:
இன்றைய பாடப்பகுதியை நாளை படிக்கலாம் என்று ஒத்திப்போடக்கூடாது.
"இன்றைய வேலைகளை நாளை செய்வோம், என ஒத்திப்போடுவதால் உங்களது வளர்ச்சி இரு மடங்கு பின்னோக்கித் தள்ளப்படுகிறது" என்பதனை உணர்ந்து செயல்படுங்கள்.
தனக்கென ஒரு நேரம்:
நாள் முழுவதும் படித்துக்கொண்டே இருப்பது நல்லதல்ல. எனவே, ஒரு சில நிமிடங்களை தனக்கென ஒதுக்குங்கள். உங்களுக்கு பிடித்தை அந்த நேரத்தில் செய்யுங்கள். ஆனால் கவனத்தை சிதறவிடாதீர்கள்.
"காலம் பொன்போன்றது"
இழந்த நேரங்கள் மீண்டும் திரும்பி வரப்போவதில்லை என்பதனை எப்பொழுதும் நினைவில் கொண்டு எந்த ஒரு செயலையும் தகுந்த நேரத்தில் செய்து வாழ்வில் வெற்றியடையுங்கள்.
"நேரத்தை பயன்படுத்துங்கள் அது
உங்களைப் பெருமைப்படுத்தும்."





Comments